எதிர்வரும் 8 ஆம் திகதி தொடர் போராட்டத்தின் ஒன்பது வருட பூர்த்தியாவதையிட்டு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவழிக்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் அனைத்து தரப்பினரிமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட போது எங்களுடைய உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள். நாம் தொடர்ச்சியாக இன்றுவரை அவர்களை தேடி வீதி வீதியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்காக நீதி கேட்டு போராடி வந்த நாம் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் சர்வதேச எங்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என கேட்டு தொடர்ச்சியாக ஓரிடத்திலிருந்து போராட்டத்தை ஆரம்பித்து எதிர்வரும் 8 ஆம் திகதி 9 வருடங்கள் நிறைவடைகின்றது.
எனினும்,இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை.எனவே நாங்கள் உறவுகளை கையளித்த வட்டுவாகல் பாலப்பகுதியில் காலை ஒன்பது முப்பது மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.
இப் போராட்டத்திற்கு அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம் என்றார்.


















