இலங்கை கடல் எல்லைக்குள் ஈரானின் மற்றொரு கடற்படை கப்பல் உள்ளதாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை மறுத்துள்ள அரசாங்கம், இலங்கையை அண்மித்த பிரத்தியேக பொருளாதார மண்டத்திலேயே அந்த கப்பல் உள்ளதாகவும் கூறியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றில் நேற்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரும், அரசாங்த்தின் பிரதம கொறடாவுமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி பதிலை வழங்கினார். இதன்போது மேலும் கூறுகையில்,
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு கவுண்சில் மற்றும் அரசாங்கம் அறிந்துள்ளது. கப்பலில் உள்ளவர்கள் தொடர்பாக அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டினை மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்கவும், உயிர் அச்சுறுத்தலை தவிர்க்கவும், பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யவும் நாங்கள் தேவையான தலையீடுகளைச் செய்து வருகிறோம். இந்தக் கப்பல் எங்கள் பிராந்திய நீர்நிலைகளில் இல்லை. இது பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்ளது. ஆனாலும், உயிர்கள் தொடர்பாக நாங்கள் அதிகபட்ச தலையீட்டைச் செய்து வருகிறோம். நாடாளுமன்றத்தில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிப்போம், என அவர் மேலும் குறிப்பிட்டார்.

















