வடமாகாணத்தில் அனர்த்தத்தினால் சுமார் 14235 மாடுகள் மற்றும் எருமை மாடுகள் உயிரிழந்துள்ளநிலையில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு இழப்பீடு வழங்க 900.49 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அனர்த்தங்களால் வடமாகாணத்தில் 14, 235 மாடுகள் மற்றும் எருமைகள் உயிரிழந்துள்ளன. தேசிய வரவு செலவுத்திட்டத்தில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கால்நடைகள் திணைக்களம் ஊடாக வடக்கு மாகாண பிரதான செயலாளரிடம் 900.49 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 258.85 மில்லியன் ரூபா நிதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய விவசாயிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளில் உயிரிழந்த கால்நடைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து பதிவு செய்யப்பட்ட பண்ணையாளர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும். அதன்படி கலப்பின மாடுகளுக்காக இறந்த மாடொன்றுக்கு 2 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் 10 மாடுகள் வரையில் 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
மேலும் உள்ளூhர் மாடுகளுக்காக, இறந்த மாடொன்றுக்கு 50 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் 20 மாடுகள் வரையில் 10 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படுகின்றது. அத்துடன் பலவீனமான நிலையில் உள்ள எஞ்சிய மாடுகளுக்கென சிகிச்சை வழங்குவதற்காக 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று அனர்த்தங்களால் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 4749 ஆட்டுப் பட்டிகளுக்காக 280 இலட்சம் ரூபா பெறுமதியான 266,650 கிலோ கிராம் உணவுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் 1600 பட்டிகளுக்கும், கிளிநொச்சியில் 838 பட்டிகளுக்கும், முல்லைத்தீவில் 764 பட்டிகளுக்கும், மன்னாரில் 1009 பட்டிகளுக்கும், வவுனியாவில் 539 பட்டிகளுக்குமென இந்த உணவு வகைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார்.


















