வளைகுடா பிராந்தியத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் நேற்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கையில், கடற்றொழிலாளர்கள் தங்கள் பாரம்பரிய கடற்றொழில் எல்லைக்குள் தொழிலில் ஈடுபடுங்கள்.
அறிமுகமில்லாத கப்பல்கள் அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களை நோக்கி நகர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலில் இருக்கும்போது ஏனைய கப்பல்களுடன் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்வதையோ அல்லது எந்தவொரு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்றொழிலுக்குச் செல்லும்போதும் அல்லது கரைக்குத் திரும்பும்போதும் வழமையாகப் பயன்படுத்தப்படும் கடல் வழிப் பாதைகளையே பின்பற்றுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலால் இதுவரை இலங்கை கடற்றொழில் படகுகள் எதற்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், அரசாங்கம் எமது நாட்டு மீனவர்களை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


















