-கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன்-
-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் வருகின்ற கழிவு வாய்க்கால்கள், வீதிகள் ஒதுக்கீட்டு பிரதேசங்களில் எந்தவித பயிர்செய்கைளுக்கும் அனுமதிக்கப்படாது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச் செய்கை குழு கூட்டம் நேற்று கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அரச அதிபர் இரணைமடுக்குளத்தின் கீழான 21,160 ஏக்கர் நிலப்பரப்பிலும் பயிர்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது
அத்துடன் விவசாயத்துக்கு தேவையான உரத்தின் அளவை கமநல சேவை நிலையங்கள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கும் விவசாய பண்படுத்தல்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சரியான நீர்ப்பாசன கட்டமைப்பை பேனுவதற்கும் வெள்ளப் பாதிப்புகளை குறைத்து அழிவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் பயிர்செய்கை மேற்கொள்வதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
குறிப்பாக பயிர்செய்கை நிலங்களை அண்டிய பிரதேசங்களில் காணப்படுகின்ற கழிவு வாய்க்கால்கள் விவசாய வீதிகள் ஏனைய ஒதுக்கீட்டு பிரதேசங்கள் என்பவற்றில் பயிர்செய்கை மேற்கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான பயிர்செய்கை மேற்கொள்வதை அந்தந்த கமக்கார அமைப்புகள் ஊடாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நில அளவைத் திணைகளத்தின் ஊடாக ஒதுக்கீட்டுப் பிரதேசங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களை எல்லையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே எதிர்காலத்தில் வெள்ளப் பாதிப்புகள், அனர்த்தங்களை குறைக்கும் வகையில் இவ்வாறான ஒதுக்கீட்டு பிரதேசங்களில் பயிர்செய்கை மேற்கொள்வது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


















