-செ.சுமந்தன்-
புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் நேற்று பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பாடசாலை முன்பாக ஒன்று கூடிய பெற்றோர்கள் பதாதைகளை தாங்கியவாறு கோஷம் இட்டு அதிபரை இடமாற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையில் தற்போது உள்ள அதிபர் கடமையேற்ற காலத்தில் இருந்து மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் நிர்வாகத்திறன் அற்ற அதிபராக அவர் காணப்படுவதால் அவரை இடமாற்றி வேறு அதிபரை நியமிக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அதிபரின் செயற்திறன் இல்லாத காரணத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை. வலயத்தில் உள்ள 64 பாடசாலைகளில் மூன்றாம் நிலையில் இருந்த பாடசாலை இப்போது 64 ஆவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனா.; இந்தநிலையில் அங்கு வந்த உதவிக் கல்விப் பணிப்பாளர் ந.கந்தசாசன் பெற்றோர்களின் கோரிக்கை மனுவை பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


















