அரசாங்கத்தின் முன்னுரிமை பணிகளில் ஒன்று உள்நாட்டு கைத்தொழில்துறையை ஊக்குவிப்பது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 20ஆவது முறையாக நடைபெறும் UNCO 2026 கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை நேற்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், பொறியியல் துறை என்பது ஒரு நாட்டின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும்,
வினைத்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரதான சக்தியாகும். குறிப்பாக மாணவர் சமூகத்தைப் புத்தாக்கங்களை நோக்கி ஊக்குவிப்பதற்கு இவ்வாறான கண்காட்சிகள் வழங்கும் ஆதரவு மிகவும் பெறுமதியானது.
நாட்டின் கைத்தொழில் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக, தேசிய கைத்தொழில் தகவல் தொகுதி மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் மத்திய டிஜிட்டல் தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சுழற்சி நிதியங்கள் ஊடாகக் கைத்தொழிலாளர்களுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இம்முறை கண்காட்சியில் வெளிநாடுகளின் பங்களிப்பும் கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும். இதன் மூலம் உள்நாட்டு முயற்சியாளர்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளையும் சர்வதேச தொழில்நுட்பங்களைப் பரீட்சித்துப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
பொறியியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் முயற்சியாளர்கள் எனப் பெருமளவிலானோரின் பங்களிப்புடன் நடைபெறும் இக்கண்காட்சி, நாட்டின் கைத்தொழில் எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாகும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, தேசிய காகித நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க,
இலங்கை ஒருங்கிணைந்த பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் ஆனந்த குணவர்தன உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், முயற்சியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


















