-திருத்தந்தை லியோ வலியுறுத்தல்-
மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் ஈரான் போரினால் அப்பாவி மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ள திருத்தந்தை லியோ, உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
வத்திக்கானின் புனித பேதுரு சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த பிரார்த்தனையின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு திருத்தந்தை மேலும் தெரிவிக்கையில்:
போரின் கொடூரமான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த வருத்தங்களை வெளியிடுகின்றேன்.மத்திய கிழக்கு மக்கள் கடந்த இரண்டு வாரங்களாக போரின் கொடூரமான வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் நல்மனம் கொண்ட அனைத்து ஆண்களும் பெண்களும் சார்பாக நான் போரை நிறுத்துங்கள் என சம்பந்தப்பட்டவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இடம்பெயர்ந்த மக்களுடன் நான் துணை நிற்பதுடன் தாக்குதல்களில் தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தொடர்ச்சியான வன்முறையானது பிராந்தியத்தில் நீதியையோ, ஸ்திரத்தன்மையையோ அல்லது நிலையான அமைதியையோ கொண்டு வராது.
எனவே, போரில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் பேச்சுவார்த்தை மற்றும் அமைதி வழிகூடாக தீர்வுகளைக் காண முன்வர வேண்டும் என்றார்.


















