மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது அநீதியான செயலாகும்.
வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை நாம் ஒரு கடமையாகக் கருத வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். கடந்த 9 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அடிப்படை உரிமையை நாம் வழங்கவில்லை. இது மிகவும் அநீதியான செயலாகும்.
கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமக்கான ஆட்சி அதிகாரத்தை கோரி போராடினர். அதற்காகப் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. எனவே, அந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதை நாம் ஒரு கடமையாகக் கருத வேண்டும் என்றார்.


















