-சந்தை மதிப்பு 15 மில்லியனாம்-
கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் 78 கிலோவுக்கும் அதிகமான வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் அண்மையில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான 8 பொதிகளை சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 78 கிலோ 300 கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா, கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக தரையிறங்க முடியாததால் கடலில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கஞ்சா கையிருப்பின் மொத்த மதிப்பு 15 மில்லியன் ரூபாய்க்கு அதிகம் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி – ஜெயபுரம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.


















