-பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் பதில்-
-வி.சரவணன்-
இராணுவம் செய்த படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல்களுக்க நீதியை கோரும் நாம் எப்படி அதே இராணுவத்திடம் எரிபொருளை பெறுவது? என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், இராணுவத்திடம் எரிபொருள் பெறமுடியாது எனவும் கூறியுள்ளார்.
நாட்டில் உருவாகியுள்ள எரிபொருள் நெருக்கடியை தொடர்ந்து இராணுவம் நிர்வகித்துவரும் எரிபொருள் நிலையங்களின், ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிபொருளை பெறலாம் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதனை மறுதலித்து, நேற்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, எரிபொருள் விநியோகம் போன்ற அத்தியாவசிய மக்கள் மயப்பட்ட சேவைகளை இராணுவத் தலையீட்டின் ஊடாக பெற்றுக்கொள்ளும் மேற்படி முறைமை, நிருவாக வசதிப்படுத்தலின் பொருட்டு தங்களுக்கு பொருத்தமாக அமைந்தாலும், வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சார்பாளர்களாக எங்களின் இயல்பொழுங்களை அது பாதிக்கும். போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் சார்பாளராக, எமது மக்களோடு சேர்ந்து நாமும் இதே இராணுவப் பொறிமுறைக்குள் நம்பி ஒப்படைத்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை பத்து ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
இறுதிப் போரில் இதே இராணுவக்கட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான நீதிக்காகவும் நீதிக்கான சர்வதேச தலையீட்டுக்காகவும் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழலில் இராணுவத் தலையீட்டின் ஊடாக எரிபொருள் பெறுவது எம் அரசியல் நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் முரணான செயற்பாடாக அமைந்துவிடும்.
எனவே சனநாயக நிருவாகத்தின் கீழ் மாற்று வழிமுறையொன்றின் ஊடாக எமக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குமாறு அந்த கடித்தில் வலியுறுத்தியுள்ளார்.


















