கியூ.ஆர் குறியீட்டை சட்டவிரோதமான முறையில் தரவிறக்கம் செய்த 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமைக்கு இதுவரை சுமார் 60 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.இதில் சுமார் 20 இலட்சம் பேர் புதிதாகப் பதிவினை மேற்கொண்டவர்களாவர்.
இதேவேளை, கியூ.ஆர் முறைமையில் பதிவு செய்ய முடியாதுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் தொழில்நுட்பக் குறைபாடுகள் இதுவரையில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, எரிபொருள் நுகர்வை இயன்றவரை மக்கள் மட்டுப்படுத்துவது அவசியமானது.
இது இவ்வாறிருக்க, கியூ.ஆர் குறியீட்டை சட்டவிரோதமான முறையில் தரவிறக்கம் செய்த 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

















