-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்-
எதிர்வரும் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்பு இதிலும் உள்வாங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நாளை மறுதினம் புதன்கிழமை 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று வரவுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதும் பாரிய நட்டத்துடனேயே செயற்பட்டு வருகின்றது. தற்போது மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மத்தியிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 20 பில்லியன் ரூபாயைச் செலவிடவேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.


















