ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இதன்போது இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான ஈரான் தூதுவர், எரிபொருளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தமை குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், அந்த முன்மொழிவை வரவேற்பதாகவும், இருப்பினும் கப்பல் வசதிகளைக் கொண்ட நாடுகளே அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும் என்றும், இலங்கைக்கு தற்போதைக்கு அந்த வசதி இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது பல எரிபொருள் முன்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றில் சில எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவித்தார்.


















