மாலைதீவுகளின் மாலே தேசிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற எட்டாவது 20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் குழு போட்டியில் வரவேற்பு நாடான மாலைதீவுகளை எதிர்த்தாடிய இலங்கை 3 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டி வரலாறு படைத்தது.
இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் சிறு தடுமாற்றத்துடன் விளையாடிய இலங்கை இளையோர் அணி ஆட்டத்தின் முதலாவது பகுதியில் 2 கோல்களை மாலைதீவுகளுக்கு விட்டுக்கொடுத்தது.
போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் மாலைதீவுகள் அணித் தலைவர் மொஹமத் இலான் இம்ரான் கோல் அடித்தார்.
தொடர்ந்து முதலாவது ஆட்டத்தின் உபாதையீடு நேரத்தில் மொஹமத் இலான் இம்ரான் தனது இரண்டாவது கோலைப் போட்டார். இடைவேளையின்போது மாலைதீவுகள் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் சிறந்த வியூகங்களுடன் விளையாடிய இலங்கை 47 ஆவது நிமிடத்தில் மொஹமத் கதீம் கோல் போட்டு அசத்தினார்.
தொடர்ந்து திறமையாக விளையாடிய இலங்கை இளையோர் அணியினர் 63 ஆவது நிமிடத்தில் மொஹமத் ஹிஜாஸி கோல் அடிக்க போட்டி 2 – 2 என சமநிலைக்கு வந்தது.
88 ஆவது நிமிடத்தில் இலங்கைக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை அணித் தலைவர் மொஹமத் {ஹசெய்ன் அப்துல்லா கோலினுள் புகுத்தி இலங்கையை வெற்றிபெறச் செய்தார். இந்தப் போட்டி முழுவதும் திறமையாக விளையாடிய அப்துல்லா ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.


















