-தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்-
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக தமிழ்,முஸ்லிம் பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன்களுக்காக,உரிமைகளுக்காக,அவர்களின் ஊடகப்பணி மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முன்னெடுத்திருந்தவர் மூத்த பிராந்திய ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீமின் மறைவு குறித்து தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், அதன் முன்னாள் பிரதித்தலைவரும் அரை நூற்றாண்டுக்கும் அதிக ஊடக அனுபவம் கொண்ட மூத்த பிராந்திய ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரை சேர்ந்த ஏ.எல்.எம்.சலீம் 1966 ஆம் ஆண்டு பிராந்திய செய்தியாளராக தமிழ் ஊடகத்துறைக்குள் காலடி வைத்தது முதல், தனது இறுதி மூச்சு வரை ஊடகப்பணியை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார்.
சலீம் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் அவர் தனது ஊடகப்பணியை கிழக்குடன் மட்டும், பிராந்திய செய்திகளுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. தலைநகரிலிருந்தும்,வடக்கு மாகாணத்திலிருந்தும் வெளிவரும் பத்திரிகைகளில் பிராந்திய,தேசிய செய்திகள், கட்டுரைகள் என தனது கனதியான எழுத்துக்களினால் தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களில் ஆளப் பதிந்த ஒருவர்.
சமூக ஒற்றுமையையும்,தமிழ் – முஸ்லிம் உறவையும்,தேசிய ஒருமைப்பாட்டையும் தனது எழுத்துக்கள், செய்திகளில் பாதுகாத்த சலீம் அவர்கள் யுத்த கால சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால் மிக்க காலகட்டங்களில் கூட தனது ஊடக நேர்மை தவறாது அயராது களப் பணியில் ஈடுபட்டவர். அவரது இந்த அர்ப்பணிப்பு மிக்க பணியை கௌரவிக்கும் முகமாக இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவித்திருந்தது.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் அதன் முன்னாள் பிரதித்தலைவருமாக இருந்த சலீம் இந்த ஒன்றியத்தின் ஊடாக தமிழ்,முஸ்லிம் பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன்களுக்காக,உரிமைகளுக்காக, அவர்களின் ஊடகப்பணி மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முன்னெடுத்திருந்தவர்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்திக்கும் பிரார்த்திக்கின்றோம்.


















