கலை, இலக்கியம், சமூக சேவை, வைத்தியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளுக்கான பட்டியல் இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்ம ஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 விருதுகளை இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் 25 ஆம் திகதி 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று மேலும் 65 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டெல்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் நடிகர் மம்முட்டி, நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உள்ளிட்டோருக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

















