சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளில், 27 பேர் கைது செய்யப்பட்டதுடன், 12 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டில் ஜூன் 16 முதல் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், நாட்டின் கடல் எல்லையை உள்ளடக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், நடவடிக்கைகளின்போது 10 டிங்கி படகுகள், 2 கேனோ படகுகள், வணிக வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலை சூடைகுடா, ஸ்விட் பே, யாழ்ப்பாணம் உடுத்துறை, வெத்தலைக்கேணி, கட்டைக்காடு, சிலாவத்துறை சாவாரிபுரம் கடற்கரை உள்ளிட்ட கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைப் பகுதிகளில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களுக்கும், மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


















