போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினை தொடர்கிறது. சுதந்திரமாக செய்தி அறிக்கையிடுவதற்கு தடை விதிப்பதும், ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அந்த விடையங்களை நீர்த்துப்போகச் செய்வது வேதனையான விடையம் என யாழ் ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு. செல்வகுமார் தெரிவித்தார்.
மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் நினைவுதினமானது யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றும்போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் 1996 இல் செம்மணி பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் சம்பந்தமாக நான் கூறியிருந்தேன். குறிப்பாக தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சனைகளை தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரமே வெளிப்படுத்துகின்றன. தென்னிலங்கை ஊடகங்கள் வெளிப்படுத்த தவறிவிட்டன. இலங்கை அரசாங்கத்தினை சிங்கள அரசாங்கம் அன்றே தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். அதற்கு காரணம் தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டு செல்வதே ஆகும்.
தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றிருக்குமாக இருந்தால் இந்த அரசினை எங்களுடைய அரசு என்று தமிழ் மக்கள் நினைத்திருப்பார்கள். இதனை நான் பல்வேறு இடங்களிலும் கூறி வந்திருக்கின்றேன்.
இன்று அரச ஊடகங்களில் இருந்து நேர்மையாக பணியாற்றுபவர்கள் அதிலிருந்து வெளியேற்றப்படுகின்றார்கள். இது மன வேதனை தரும் ஒரு விடயமாகும் சமீபத்தில் ஒரு ஊடகவியலாளர் செம்மணி மனித புதைகுழி தொடர்பாக செய்திகளை சேகரித்தமை, யாழ் மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களில் செய்தி சேகரித்தமை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரிய போராட்டங்களை மேற்கொண்டமையை காரணம் காட்டி ஊடகத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறார்.
இது இந்த ஜனநாயக நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெறும் கொடுமையான சம்பவத்தின் சாட்சியமாகும். நடைபெறும் சம்பவங்களை மறைக்காது வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின் கடமையாகும். அதைவிடுத்து தங்களுக்கு எதிரான விடையங்களை மறைக்கும் விதமாக, செய்திகளை தணிக்கை செய்வதில் அரச ஊடகங்கள் தெளிவாக இருக்கின்றன. இது அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரை அரச ஊடகம் வெளியேற்றியதிலிருந்து புரிகின்றது.
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினை தொடர்கிறது. சுதந்திரமாக செய்தி அறிக்கையிடுவதற்கு தடை விதிப்பதும், ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அந்த விடையங்களை நீர்த்துப்போகச் செய்வது வேதனையான விடையம், என்றார்.(12)


















