சீன நிறுவனங்களின் போட்டி, அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான மாற்றம் ஆகிய சவால்களை எதிர்கொண்டுள்ள கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), 4,000 வேலைவாய்ப்புகளைக் குறைக்கவுள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும்.
இவை பெரும்பாலும் இங்கிலாந்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தையே பாதிக்கும்.
உலகளவில் 43,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் JLR நிறுவனம், கடந்த ஆண்டு ஏற்பட்ட இணையவழித் தாக்குதலால் ஒரு மாதத்திற்கும் மேலாக உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது அந்நிறுவனத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளை மேலும் தீவிரமடையச் செய்தது.
பணியாளர் குறைப்பு நடவடிக்கையின் போது, அனைவருக்கும் அக்கறை, நேர்மை மற்றும் மரியாதையுடன் ஆதரவளிக்க நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பி.பி. பாலாஜி தெரிவித்தார்.
கடுமையான போட்டி, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் தொடர்ந்து நிலவும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றிற்கு மத்தியில், வாகனத் துறை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
JLR நிறுவனம் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை கால அவகாசம் அளித்து, விருப்பத்தின் பேரில் பணியிலிருந்து விலகும் முறையின் மூலம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், தேவைப்பட்டால் குறைவான சலுகைகளுடன் கட்டாய ஆட்குறைப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள நேரிடும் என்று அது தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஊழியர்களுக்கு வரும் நாட்களில் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.7 பில்லியன் பவுண்டுகள் நிதியைச் சேமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


















