அ.அன்பழகன்
இந்தியாவின் புதுடில்லியில் 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு, கடந்த செப்டெம்பர் 12மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெற்றது. இந்த மநாhடு வளர்ந்து வரும் நாடுகளின் உலகளாவிய பொருளாதார அதிகாரப் புள்ளியை வெளிப்படுத்திய முக்கிய நிகழ்வாகும்.
சீனா, ரஷ்யா, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் அதன் புதிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், இலங்கை பங்கேற்பதற்கு கிடைத்த வாய்ப்பையும் நழுவ விட்டமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வரப்போராடும் இலங்கைக்கு, பிரிக்ஸ் போன்ற மாபெரும் சர்வதேசக் கூட்டமைப்பில் பங்கேற்பதும் அதன் பங்காளி நாடாவதும் ஒரு சாதாரண இராஜதந்திர நிகழ்வு மட்டுமல்ல.
மாறாக, நாட்டின் பொருளாதார மீளெழுச்சிக்கான புதிய மூலோபாயமாகும். அந்த வகையில், இந்த வாய்ப்பு தவறவிடப்பட்டதானது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட முதிர்ச்சியற்ற இராஜதந்திர தேக்கநிலையாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கை தற்போது சந்தித்து வரும் பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மட்டும் முழுமையாக நம்பியிருக்க முடியாது. பாரம்பரிய மேற்கத்திய நிதி நிறுவனங்களின் கடுமையான நிபந்தனைகளுக்கு மாற்றாக, பிரிக்ஸ் அமைப்பின் ‘புதிய அபிவிருத்தி வங்கி’ நெகிழ்வுத்தன்மை கொண்ட நிதியுதவிகளை வழங்கி வருகிறது.
இலங்கையின் உட்கட்டமைப்பு மேம்பாடு, வலுச்சக்தித்துறை மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களுக்கு எளிய நிபந்தனைகளுடன் கூடிய கடன்களையும் முதலீடுகளையும் பெறுவதற்கு பிரிக்ஸ் அமைப்பில் இணைவது மிகவும் முக்கியமான மூலோபாயமாகும்.
அத்துடன், அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தைக் குறைத்து, உள்ளுர் நாணயங்களில் வர்த்தகம் செய்வதை பிரிக்ஸ் ஊக்குவித்து வருகின்றது. பாரிய அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிர்கொண்ட இலங்கைக்கு, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடனான வர்த்தகத்தை அந்தந்நாடுகளின் நாணயங்களிலோ அல்லது மாற்றுச் செலுத்துகை முறைகளிலோ முன்னெடுப்பது அந்நியச்செலாவணி அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும்.
பிரேசில், இந்தியா, சீனா போன்ற பிரம்மாண்டமான நுகர்வுச் சந்தைகளுக்கு இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதிகளான தேயிலை, ஆடை மற்றும் நறுமணப் பொருட்களை நேரடியாகக் கொண்டு சேர்க்கவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரிக்ஸ் சக்திவாய்ந்த நுழைவாயிலாகும்.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அவர் பதவியேற்று சில வாரங்களே ஆகியிருந்த நிலையில், அந்த அழைப்பை ஏற்று நேரடியாகச் செல்வதைத் தவிர்த்து, வெளிவிவகார அமைச்சரை தனது பிரதிநிதியாக அனுப்பியிருந்தார்.
அதனால் உலகின் வல்லரசுத் தலைவர்களை ஒரே மேடையில் சந்தித்து, கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார உதவிகள் குறித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொன்னான வாய்ப்பு நழுவவிடப்பட்டது.
2024 அக்டோபரில் பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்த போதிலும், அதற்குப் பிறகு அநுர அரசாங்கம் இராஜதந்திர அழுத்தங்களையோ அல்லது முறையான தொடர்பாடல்களையோ பேணவில்லை.
இலங்கையின் அண்டை நாடுகளான மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்றவை தங்களின் இராஜதந்திரப் பிரசாரங்கள் மூலம் பிரிக்ஸ் கூட்டமைப்பின் பங்காளி நாடுகளாக முன்னணியில் வந்துள்ள நிலையில், இலங்கை வெளிப்படுத்தி முதிர்ச்சியற்ற இராஜதந்திர தேக்கநிலை காரணமாக புதுடில்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கான அழைப்புப் பட்டியலிலும் உள்வாங்கப்படாமல் போனது.
இந்தியாவில் மாநாடு நடந்தும் அயல்நாடான இலங்கைக்கு அழைப்பு கிடைக்காமைக்கு, அநுர அரசு பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் காண்பிக்கும் இருதரப்பு உடன்பாடுகளை நடைமுறையில் செயற்படுத்துவதற்கு காண்பிக்கப்படும் தாமதமும் காரணமாக இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு அனைத்து உறுப்பு நாடுகளின் ஏகமனதான சம்மதம் தேவை என்ற சூழலில், இலங்கை வெளிப்படுத்திய மந்தநிலை காரணமாக இந்தியாவினாலும் இலங்கையைப் பரிந்துரைக்க வலுவான காரணமில்லாமல் போயிருக்கின்றது.
இலங்கையின் ஏற்றுமதிச் சந்தையில் அமெரிக்கா முதன்மைப் பங்கு வகிப்பதாலும், ஆடைத்துறை அமெரிக்க வரிச்சலுகைகளை நம்பியிருப்பதாலும், டொலருக்கு மாற்றீட்டைப் பேசும் பிரிக்ஸ் அமைப்பில் ஈடுபாட்டுடன் பங்கேற்றால் அமெரிக்கா அதிருப்தியடையும் என்ற தேவையற்ற அச்சம் அநுர அரசுக்கு காணப்படுகிறது.
ஆனால் நடைமுறையில், பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவுடன் வலுவான வணிக உறவைப் பேணிக்கொண்டே பிரிக்ஸிலும் வெற்றிகரமாக இயங்குகின்றன. அமெரிக்காவின் நேரடி அழுத்தங்கள் எதுவும் இல்லாதபோதிலும், இலங்கை தனக்குத்தானே கற்பனைக் கோட்டை வரைந்துகொண்டு இராஜதந்திர ரீதியாக தன்னை வரையறுத்துக்கொள்வதானது, நாட்டின் மீளெழுச்சிக்கான சிந்தனையின் வெளிப்பாடாக இல்லை.
அந்த வகையில் இலங்கை, கடந்த காலத்தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, பிரிக்ஸ் அமைப்பை வெறும் அரசியல் கூட்டமைப்பாகப் பார்க்காமல், பொருளாதார மீளெழுச்சிக்கான முதன்மையானதொரு கருவியாகவே அநுர அரசாங்கம் கையாள வேண்டும்.
பிரிக்ஸ் அமைப்பிற்கான இலங்கையின் விண்ணப்பம் முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை என்பதால், எதிர்வரும் காலங்களில் இலங்கை அதனை முன்னோக்கி நகர்த்துவதில் ஆர்வத்துடன் செயற்படுத்துவது பொருத்தமானது.
அந்த வகையில் இலங்கை அரசு முக்கிய நகர்வுகளை தாமதமின்றிச் செய்ய வேண்டியுள்ளது. அதில் முதலாவதாக, புதுடில்லி, மொஸ்கோ மற்றும் பீயிஜிங் ஆகிய தலை நகரங்களுடன் உயர் மட்ட இராஜதந்திர தொடர்புகளை புதுப்பித்து, பிரிக்ஸ் பங்காளி அந்தஸ்தைப் பெறுவதற்கான ஆதரவைத் திரட்ட வேண்டும்.
இரண்டாவதாக, இந்தியாவில் நிலுவையில் உள்ள இருதரப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தி, பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக, பிரிக்ஸ் புதிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், மாற்று நிதி ஆதாரங்களைக் கண்டறிவதற்கும் நிபுணர்கள் அடங்கிய பிரத்தியேகப் பிரிவைச் செயற்படுத்த வேண்டும்.
இவ்விதமான நகர்வுகளின் அடிப்படையில் தான், உலகப் பொருளாதாரச் சக்கரத்தின் மையம் ஆசியாவையும் வளர்ந்து வரும் நாடுகளையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதும் அதன் பங்காளியாவதும் இலங்கையின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும் விரைவான மீளெழுச்சிக்கும் தவிர்க்க முடியாத புத்திசாலித்தனமான நகர்வாக இருக்கும்.

















