பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சிலருக்கு எதிராக நிதி தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு இன்று (29) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் நிலவரத்தைக் கண்டறிவதற்காகவும், விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காகவும் இந்த வழக்கை 2027 பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு மீண்டும் அழைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார்.
தற்சமயம் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில், ‘என்.ஆர். கன்சல்டன்சி’ என்ற நிறுவனத்தில் முறையற்ற வழிகளில் ஈட்டப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபாயை முதலீடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


















