அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான சட்ட மூலம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி+ வரிச் சலுகையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை நாடு இழக்க நேரிடும் என இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து ஒன்றிணைந்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் இந்திக லியனகே கருத்து தெரிவிக்கையில்,
தமக்குக் கிடைக்கப்பெற்று வரும் ஜி.எஸ்.பி+ சலுகைக் காலம் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், அதனை மீண்டும் புதுப்பித்துக் கொள்வது தற்போதைய பொருளாதார சூழலில் அவசியமாகவுள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் புதுப்பிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ள பிரதான தடையாக, தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மூலமும், அதற்குப் பதிலாக அமுல்படுத்தவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான சட்ட மூலமும் அமைந்துள்ளன.
இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானம் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் நிலையில், அதில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆடைகள் ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இத்தனைக் காலமும் இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையின் பின்னணியிலேயே ஐரோப்பிய சந்தைக்கான வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஒருவேளை இந்த வரிச் சலுகை இலங்கைக்கு இல்லாமல் போனால், சர்வதேச சந்தையில் இலங்கைக்கான போட்டி நாடுகளான பங்காளதேசம், கம்போடியா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையை விடக் குறைந்த விலையில் ஐரோப்பாவிற்கு ஆடைகளை விநியோகிக்கத் தொடங்கும்.
இதன் காரணமாக இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்பதால், ஐரோப்பிய கொள்வனவாளர்கள் இலங்கையிடமிருந்து ஆடைகளைக் கொள்வனவு செய்ய முன்வரமாட்டார்கள் என்றும், ஏனைய போட்டி நாடுகள் இலங்கையின் சந்தைப் பங்கைக் கைப்பற்றிவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.
நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமான முதன்மைப் பொறுப்பாகும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, புதிதாகக் கொண்டு வரப்படும் சட்டமூலத்தால் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை பறிபோகக் கூடாது என்பதே ஆடை ஏற்றுமதியாளர்களின் முக்கிய கோரிக்கையாகும்.
எனவே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, நாட்டுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் சட்டமூலத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, எதிர்வரும் சில ஆண்டுகளுக்காவது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைத் தடையின்றித் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான ஆதரவை வழங்குமாறு ஆடை ஏற்றுமதியாளர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


















