புத்தளம் ஆதார மருத்துவமனையில் ஆறுமாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும், அதன் முதல் மூன்று மாடிகளுக்காக இந்திய அரசிடமிருந்து 600 மில்லியன் ரூபாய் நன்கொடையைப் பெற்றுக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கிவந்த புத்தளம் ஆதார மருத்துவமனையை அபிவிருத்தி செய்து தரமுயர்த்தும் நோக்குடன், வடமேல் மாகாண ஆளுநரின் உடன்பாட்டிற்கு அமைய மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு 2026 மார்ச் 03ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
நோயாளர்களுக்குத் தொடர்ச்சியான மற்றும் தரமான மருத்துவச் சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, 8,640 சதுரமீற்றர் தரைப் பரப்பளவுடன் கூடிய ஆறுமாடிக் கட்டிடத்தை 04 ஆண்டுகளில் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, சிகிச்சைப் பிரிவுகள், குறுகியகால வதிவிட சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி, பிணி ஆய்வு மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கான இடஒதுக்கீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவைத் தாபிப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இக்கட்டிடத்தின் முதல் மூன்று மாடிகளை நிர்மாணிப்பதற்கு 600 மில்லியன் ரூபாய்களை வழங்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புத்தளம் ஆதார மருத்துவமனைக்கான உத்தேச ஆறுமாடிக் கட்டிட நிர்மாணத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், முதற்கட்டமாக மூன்று மாடிகளை நிர்மாணிப்பதற்கான 600 மில்லியன் ரூபாய் நன்கொடையைப் பெற்றுக்கொள்ள இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


















