தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பொறுப்பிற்கு ஒருவர் ரூ. 5 கோடி தன்னிடம் கொடுக்க முன்வந்ததாகக் கூறிய அமைச்சர் ராஜ்மோகன் மீது நடவடிக்கை எடுக்க அவர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடந்த நவ. 1 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற தலைவர் பொறுப்பிற்கு ரூ. 5 கோடி ஒருவர் கொடுக்க முன்வந்ததாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் சட்டத்துறை இணைச் செயலாளரும், எழும்பூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பரந்தாமன் நவ. 2 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு அளித்திருந்தார்.
அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988 -ன்படி வழக்குத் தொடர அனுமதி வேண்டி இன்று (நவ. 23) பரந்தாமன், தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் இதில் தொடர்புடையதாகக் கண்டறியப்படக்கூடிய பிற நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீது தகுந்த விசாரணை மற்றும் புலனாய்வு நடத்துவதற்கு, சட்டப்படி தேவைப்படக்கூடிய வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் முன் அனுமதியை பரிசீலித்து வழங்குமாறு, இந்த விவகாரத்தைத் தகுதிவாய்ந்த அதிகாரியின் முன்பாகக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன், சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்புத் தேவைகளுக்கு ஏற்ப இவ்விவகாரம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் கையாளப்படுவதை உறுதி செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

















