சமூக வலைத்தளங்களில் பரவிய தவறான வீடியோவினால் ராமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற நபர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ராமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.

இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள் குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
பின்னர் கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் இவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.


















