கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது. இதில் நடப்பு சம்பியன் ஜானிக் சின்னர், கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் சம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்ற அவருக்கு 43 கோடியும், 2 ஆவது இடம் பெற்ற ஜானிக் சின்னருக்கு 21 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3 ஆவது முறையாகும். முந்தைய இரு மோதல்களில் ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் அல்காரசும், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் ஜானிக் சின்னரும் வெற்றி பெற்றிருந்தனர்.

















