கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர், முன்னால் சென்ற முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளார்.

இதில், ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மூவரும் ஆரம்பத்தில் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இரு வாகனங்களின் அதிவேகமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


















