-கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர்-
-சு.பாஸ்கரன்-
அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனை காரணமாக மண்வளம் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளரும் மேலதிக விவசாய ஆராட்சிப் பிரிவு பணிப்பாளருமான எஸ். ராஜேஷ்கண்ணா தெரிவித்தார்
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய செய்கையின் போது இரசாயன உரப்பாவனை அதிகரித்த அளவில் காணப்படுகிறது. இதனால் நல்ல வளமான மண்உவர்த்தன்மையடைந்து வருவதுடன் உரப்பாவனை காரணமாக மண்வளம் மிக வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றது.
இது எதிர் காலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே விவசாயிகள் மட்டத்தில் விழிப்புணர்வு மிக மிக அவசியமாகும். அந்த வகையில் விவசாயிகள் சேதன உரங்களை படிப்படியாகப் பாவிக்க வேண்டும்.
தற்போது மாவட்டத்தில் ஹெக்ரேயர் ஒன்றுக்கு 5.6 தொன் அளவிலான உற்பத்தியே அதிகரித்த உற்பத்தியாக கிடைக்கப் பெறுகின்றது. மனிதர்களுக்கும் மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தடை செய்யப்பட்ட பங்கசு நாசினி மற்றும் கிருமிநாசினிகள் பயன்படுத்துவதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்
அத்துடன் கழிவு வாய்க்கால்கள் துப்புரவு செய்யப்படாமையினால் வயல் நிலங்களின் ஊடாகவும் வெள்ள நீர் பாய்வதால் களைநெல் மற்றும் பன்றிநெல் போன்றனவும் நெற்பயிருக்கு கேடு விளைவிக்கின்றன. இவ்வாறான பயிர்களும் அதிகளவில் பரவி வருகின்றன. அத்துடன் ஆகாயத்தாமரை, சல்பீனியா போன்ற நீர்த் தாவரங்களும் பரவலடைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















