-வடக்கு ஆளுநர்-
-க.கனகராசா-
இவ்வாண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதுடன் அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடமாகாண சபை அமைச்சுக்களின் இந்த ஆண்டுக்கான செயற்றிட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்றது.இதில் ஆளுநர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
மாகாண சபையின் வழமையான நிதி, ‘டித்வா’ பேரிடர் பாதிப்புக்கான நிதி, மத்திய நிரல் அமைச்சுக்களின் நிதி, மாவட்டச் செயலகங்களின் நிதி, உள்ளூராட்சி மன்றங்களின் சபை நிதி மற்றும் முத்திரைத் தீர்வை நிதி எனப் பல்வேறு நிதி மூலங்களினூடான வேலைத் திட்டங்களை நாம் இந்த ஆண்டு முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இதற்கு தேவைப்படும் தொழில்நுட்ப ஆளணியின் ஒத்துழைப்புகளையும தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும். எமக்கு இப்போதுள்ள சாதகமான காலநிலையைப் பயன்படுத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிப்பது இலகுவானது.
எனவே, திட்டங்களை உரிய காலவரையறைக்குள் நிறைவு செய்வதுடன், அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாகாணப் பணிப்பாளர்கள், மாநகர சபைகளின் ஆணையாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
















