-பருத்தித்துறை பிரதேசசபை கூட்டத்தில் தீர்மானம்-
-த.அம்பிகாவதி-
வடமராட்சி பிரதேசத்தில் அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் குறித்த வட்டாரத்தின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தில் 9 ஆம் வட்டார உறுப்பினர் ஜெ.குறிஞ்சிக்குமரன் விடுத்த கோரிக்கை சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத் தொடர்பை துண்டித்து ஒரு தொடர்ச்சியான சிங்கள குடியேற்றத்தை உருவாக்குவாதே பௌத்த மேலாதிக்கத்தின் நோக்கம். இதனை நிறைவேற்ற கிவுல் ஓயா என்ற திட்டத்i அரசு கருவியாக பயன்படுத்துகின்றது. இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென்ற கண்டன தீர்மானம், செம்பியன்பற்று தனிப்பனை வீதியின் இருமருங்கிலும் குப்பைகள் கொட்டப்படுவதுடன் காடுகள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளமையினால் இருமருங்கிலும் துப்புரவு செய்யப்பட வேண்டும்.
கட்டைக்காடு – மாமுனை கடற்கரை வீதியில் விபத்துகள் அதிகரித்துள்ளமையினால் வேகக் கட்டுப்பாட்டு மற்றும் போக்குவரத்து குறியீடுகள் காட்சிப்படுத்துவதுடன் வீதியின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள மரங்கள் அகற்றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் அன்றைய கூட்டத்தில் குறித்த உறுப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தன.


















