யாழ்பாணம் – அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து வாகனத்தில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த இருவரும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 வயதான இளைஞர் உயிரிழந்த நிலையில், அந்த வாகனத்தில் பயணித்த மேலும் இருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைதான இரு சந்தேகநபர்களும் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி நேற்று நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மீள விசாரணைக்கு அழைத்து, பிணை விண்ணப்பம் செய்த நிலையில் இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் காசுப் பிணை மற்றும் தலா 2 ஆள் பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


















