-த.அம்பிகாவதி-
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக உயர் பதவிகளை, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் அலங்கரிக்க வேண்டும்.
அதற்காக மாணவர்கள் கல்வியுடன் மாத்திரமன்றி, ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ‘பண்டாரவன்னியன் நினைவு சதுரங்க மற்றும் பேச்சுப் போட்டி – 2025’ இற்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
ஆளுமையற்ற கல்வியைக் கொண்டு உயர் பதவிகளை அடைபவர்களால் சமூகத்துக்கும் நாட்டுக்கும் எவ்வித பயனுமில்லை. அத்தகையவர்கள் உயர் பதவிகளில் அமர்ந்து சுற்றறிக்கைகளைக் காரணம் காட்டி பின்தங்கிய மக்களுக்கு உதவ முன்வர மாட்டார்கள்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குக் கல்வியை மாத்திரமன்றி, மற்றவர்களுக்கு உதவும் இரக்கக் குணத்தையும் போதிக்க வேண்டும். ஆளுமையுடன் கூடிய முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களே நாளை சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள். அதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என நம்புகின்றேன் என்றார்.


















