-ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு-
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது விக்கிரமராசசிங்க மன்னனின் சிங்கக் கொடியே தேசியக் கொடியாக ஏற்றப்பட்டது. சிங்கள மக்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்த இந்தக் கொடியைத் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஆட்சேபித்ததால் கொடியின் ஓரத்தில் தமிழ் மக்களைக் குறிக்கச் செம்மஞ்சள் நிறப் பட்டியும் முஸ்லிம் மக்களைக் குறிக்கப் பச்சைநிறப் பட்டியும் சேர்க்கப்பட்டன.
ஆனால், சிங்கள மக்களைக் குறிக்கும் சிவப்பு வர்ணமே கொடியில் பெரும்பங்கு இடம்பெற்றது. பௌத்தக் குறியீடுகளும் இடம்பெற்றன. மூவின மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இல்லாது சிங்கள மக்களுக்கான கொடியாகவே தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டது. இதனால், இனங்களை ஒருங்கிணைப்பதற்குப் பயன்படவேண்டிய தேசியக் கொடி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தியதன் தொடக்கமாக அமைந்தது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற கருப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இலங்கைத் தீவின் வரலாற்றுக் காலத்தில் சிங்கம் ஒருபோதும் வாழ்ந்ததாக அறியப்படவில்லை. சிங்கள மக்கள் தமது வரலாற்று நூலாகக் கொண்டாடும் மகாவம்சத்தின் அடிப்படையிலேயே சிங்கள மக்களின் குறியீடாகச் சிங்கம் விக்கிரமராசசிங்க மன்னன் காலம் தொடக்கம் கொடிகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆரம்பத்தில் கொடிக்கம்பத்துக்கு எதிர்ப்புறமாக, வலப்பக்கம் நோக்கியிருந்த சிங்கம் தமிழ் முஸ்லிம் மக்களைக் குறிக்கும் நிறப்பட்டிகள் சேர்க்கப்பட்டதன் பின்னர் அவற்றை நோக்கித் திருப்பப்பட்டது.
தேசியக் கொடியின் வடிவமைப்புக் குழுவில் அங்கத்துவம் வகித்த செனட்டர் நடேசன் கொடியில் இனப்பாகுபாட்டைக் கடுமையாக எதிர்த்தார். இது பிரிவினை வாதத்துக்கு வழிகோலும் என்று எச்சரித்தார். ஆனால், பேரினவாதம் அதனை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை.
தேசியக்கொடியில் இலங்கையில் காணப்படாத சிங்கத்தை வாளேந்த வைத்ததன் பின்னர் அரசால் இன்னுமொரு விலங்கை தேசிய விலங்காக அறிவிக்க முடியவில்லை. இலங்கைக் காடுகளில் காணப்படும், இலங்கைக்கு மட்டுமே உரித்தான சிறுத்தைப் புலியே தேசிய விலங்காகத் தெரிவு செய்வதற்கு மிகப் பொருத்தமானது. ஆனால் விடுதலைப் புலிகள் தங்களது சின்னமாகப் புலியைத் தெரிவு செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக சிறுத்தைப் புலியைத் தேசிய விலங்காக அங்கீகரிப்பதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது. வாளேந்திய சிங்கம் தங்களை அடக்கியொடுக்குவதாகத் தமிழ் மக்கள் உணர்ந்ததாலேயே தங்களுக்கான தனியான ஒரு சின்னத்தைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















