-உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் தர்மகுமாரன்-
-க.கனகராசா-
இன்றைய இளம் தலைமுறையினர் முயற்சி குறைந்தவர்களாக, வினைதிறனை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனரென உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.
வட்டு. இந்துக் கல்லூரியின் மரதன் ஓட்ட நிகழ்வு அதிபர் தனஞ்சயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்:
தமிழர் எப்பொழுதுமே முயற்சியுடன் செயல்படுபவர்கள். இழந்ததை மீட்டு கொள்வதில் பின்னிற்பதில்லை. ஆனால் இன்றைய தலைமுறையினர் முயற்சி குறைந்தவர்களாக, செயல்திறன் அற்றவர்களாக, வினைதிறனை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர்.இதற்கு காரணம் அவர்களை ஏனோதானோ என்ற நிலையில் பொம்மைகளாக உருவாக்கி வருகிறமையேயாகும்.
எதற்காக போராடினோமோ அதனை இழந்து கொண்டு வருகிறோம். தற்போது கல்வியில் வீழ்ச்சி, போதையில் எழுச்சி, சிந்தனையில் சிதைவு, ஆரோக்கியத்தில் குறைவு என்பன காணப்படுகின்றன.
அத்துடன் கலை,கலாச்சாரம் மறைகின்றதுடன் பண்பாடு திண்டாடுகின்றது.மைதான விளையாட்டு இளம் தலைமுறையிடம் இருந்து விலகி செல்கின்ற அதேவேளை கைத்தொலைபேசியில் விளையாட்டு உணவு உறக்கமின்றி நடக்கிறது.
இதனால் சுய சிந்தனை இழக்கப்படுவதால் தமது இயலுமை, இயலாமை எது என உணரமுடியாதவர்களாக காணப்படுகின்றனர். போட்டியில் வெற்றி பெறுவது ஒவ்வொருவரினதும் இலக்காக இருந்தாலும் போட்டியில் பங்குகொள்வதே வெற்றிதான்.
முயற்சியும் பயிற்சியும் எடுத்தவன் கைதட்டல் பெறுகிறான். முயற்சியும் பயிற்சியும் எடுக்கத்தவறியவன் கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த போட்டிகளில் கைதட்டியவர்கள் கைதட்டல் பெற முயற்சி எடுக்க வேண்டும். எனவே இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும் என்றார்.


















