-பண்ணையாளருக்கு மாந்தை கிழக்கு பிரதேச சபை கோரிக்கை-
-ஜெ.டிசாந்-
இரவு நேரத்தில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை பிரதேசசபை இறுக்கமான முறையில் முன்னெடுக்கவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் சத்தியமூர்த்தி சத்திய வரதன் தெரிவித்தார்.
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றதையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
இரவு நேரங்களில் கட்டாக்காலியாக நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் உரிமையாளர்களுக்கு பலதடவைகள் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும் உரிமையாளர்கள் அசண்டையீனமாக உள்ளனர்.
இந்த இரவு நேர கட்டாக்காலி கால்நடைகளால் பண்ணையாளர்களின் கால்நடைகள் களவாடப்படுகின்ற சம்பவங்கள் மட்டுமன்றி வீதி விபத்துகளும் இடம்பெறுகின்றன. இவற்றுக்கு பதில் சொல்லவேண்டியது எமது பிரதேச சபையே.
எனவே, இனி வருங்காலங்களில் காட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை இறுக்கமாக மேற்கொள்ளப்படும். இதற்கு இடையூறு செய்பவர்களுக்கு எதிராக பொலிஸார் மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, பண்ணையாளர்கள் இரவு நேர கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துங்கள் என இறுதி அறிவித்தலை விடுக்கின்றோம் என்றார்.


















