-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன்-
-த.அம்பிகாவதி-
உற்பத்தித் திறன்களின் பயன்கள் சேவைநாடிகளான பொதுமக்களைப் போய் சேர்வதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
உற்பத்தித் திறன் போட்டிக்கு விண்ணப்பித்த மன்னார் பொது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் முன்னேற்பாடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை வருகைதந்து அரசாங்க அதிபருடன் கலந்துரையாடிய சமயம். அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது மாவட்ட செயலகத்தை பொறுத்த வரையில், உற்பத்தித்திறன் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அரச செலவீனங்களைக் குறைத்துள்ளது. இவை ஒவ்வொன்றும் பொதுமக்களுக்கு பயனுறுதியாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
களவிஜயம் மேற்கொண்ட உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாடுகள் மற்றும் 5S செயற்பாடுகள், மாவட்ட செயலக நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிந்துகொண்டனர்
மேலும், கிளை ரீதியாக முன்னெடுக்கப்பட்ட உற்பத்தித்திறன் செயற்பாடுகளை பார்வையிட்டு விபரங்களையும் செயற்பாடுகளையும் அறிந்து கொண்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் 2020 ஆம் ஆண்டு உற்பத்தித்தித் திறன் போட்டியில் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கள விஜயத்தின் நிறைவில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, தாம் மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாட்டில் மென்பொருள் ரீதியான நடைமுறைகள், கோப்பு நடைமுறைகள் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக பல புதிய விடயங்களை அறிந்து கொண்டதாக தெரிவித்தார்கள்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


















