-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்த அவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் அங்கு கிராம மட்ட அமைப்புக்களோடு உரையாடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மணல்காடு ஓல்லாந்தர் கால டச்சு தேவாலயத்திற்கு 4.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் மானிப்பாய் பிரதேசத்திலும் பல இடங்கள் புனரமைக்கப்பட வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் அகஸ்டின், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கமல், பிரஜா சக்தி தலைவர் மற்றும் நிர்வாகிகள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


















