செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளை முழுமையாக அடையாளம் காணும் செயல்முறையை தனித்து மேற்கொள்வதற்கு இலங்கையில் தற்போது தேவையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப திறன்கள் போதுமான அளவில் இல்லை. இதனை நோர்வே வெளிவிகார அமைச்சின் தெற்காசிய அலுவலகத்திற்கு பொறுப்பான அம்மையாருடனான நாளைய சந்திப்பில் எடுத்துக்கூறவுள்ளேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதை குழி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 380-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் செம்மணி மனித புதைகுழி இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி தளமாக மாறியுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை நோர்வே வெளிவிகார அமைச்சின் தெற்காசிய அலுவலகத்திற்கு பொறுப்பான அம்மையாருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளேன். அதில் செம்மணி தொடர்பாகவே முன்வைக்கவுள்ளேன்.
செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளை அகழ்ந்து எடுத்து அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு செய்யாதுவிடின் எந்தவித பிரியோசனமும் இல்லாமல் போய்விடும்.
என்புத் தொகுதிகளை முழுமையாக அடையாளம் காணும் செயல்முறையை தனித்து மேற்கொள்வதற்கு இலங்கையில் தற்போது தேவையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப திறன்கள் போதுமான அளவில் இல்லை.
சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக, சர்வதேச நிபுணத்துவத்தையும் தொழில்நுட்ப உதவியையும் இலங்கை அரசாங்கம் நாட வேண்டிய அவசியத்தை வெளிவிகார அமைச்சின் தெற்காசிய அலுவலகத்திற்கு பொறுப்பான அம்மையாருடனான சந்திப்பில
எடுத்துக்கூறவுள்ளேன்.
செம்மணி மனித புதைகுழி முக்கியத்துவமும் மிகுந்ததாக இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவும், மரணத்தைச் நிகழ்ந்த சூழ்நிலைகளை கண்டறியவும், நீண்டகாலமாக பதில்களை எதிர்பார்த்து வரும் குடும்பங்களுக்கு நீதியை வழங்கவும் தேவையான சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதற்கு அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இதுவரை காணப்படவில்லை என்பதையும் அவருக்கு கூறவுள்ளேன்.
1998 காலப்பகுதிகளில் செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தற்போதும் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ளது. எனவே இலங்கை அரசாங்கம் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து மீண்டும் டி.என்.ஏ பரிசோதனையை ஆரம்பிக்கலாம். இலங்கை அரசாங்கம் நினைத்தால் நாளைய தினம்கூட அதனை செய்யலாம். இதனை நோர்வே அரசாங்கம் பொறுப்பெடுத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கவுள்ளேன் என்றார்.(12)

















