தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ எனும் தொனிப் பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் விடுதலைப் போரில் உயிர்நீத்த ஆத்மாக்களுக்கான அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தலைமை உரையைத் தொடர்ந்து, சிறீலங்காவின் சுதந்திர தினமும் தமிழ்மக்களும் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சரவணமுத்து நவரத்தினம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும், சட்டத்தரணியுமான சிறீகாந்தா ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


















