நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கடற்றொழிலளர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
வாராந்தம் வழங்கப்படும் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக, ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபட முடியாமல் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 30 லீட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுவதால், அவர்களால் கரையோரப் பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க முடிகிறது.
ஆனால், கரையோரப் பகுதிகளில் மீன் வளம் குறைந்துள்ளதால், சிறந்த அறுவடைக்கு கிடைப்பது அரிதாகியுள்ளது. என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனக் குழு உறுப்பினர் பாக்கியநாதன் றீகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் ஒரு படகிற்கு வாரத்திற்கு 25 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் அரை லீட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குறிப்பிட்டார். இலங்கை கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்றி முடங்கியுள்ள நிலையில் உள்ளதால், அதனை சாதகமாக பயன்படுத்தி இந்திய இழுவை படகுகள் இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில் சட் டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
விசேடமாக மன்னார் வளைகுடாப் பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணக் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணைகள் கடற்றொழிலா ளர்களின் தொழிலுக்குப் பெரும் இடையூறாக அமைந்துள்ளது.
முட்கம்பி வலைகளால் கடற்பகுதிகள் வேலி அடைக்கப்பட்டு இந்தப் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள் ளன. இது மீன்களின் பருவகால இடப்பெயர்வு மற்றும் இனப்பெருக்கச் செயற்பாடுகளைப் பாதிப்பதாக உள்ளது. எரிபொருள் நெருக்கடி மற்றும் மீன் வரத்து குறைவு காரணமாக யாழ்ப்பாணச் சந்தைகளில் மீன்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


















