-அரச அதிபரிடம் ப.தர்மகுமாரன் கோரிக்கை-
-க.கனகராசா-
எரிபொருள் பிரச்சனைக்கு அரச அதிபர் தீர்வுகான முன்வர வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள செயற்கை எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரச ஊழியர்களும், அன்றாடகாச்சிகளும், சுயதொழிலாளர்களும் பாதிப்புள்ளாகி வருகின்றனர்.
சில எரிபொருள் நிலையங்கள் பொறுப்புடன் வரிசையில் நிற்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்து எரிபொருளை பகிர்ந்து வழங்கி வருகின்றன. ஆனால் சில எரிபொருள் நிலையங்கள் பொறுப்பற்ற வகையில், வகை தொகையின்றி வழங்கி, வரிசையில் நிற்பவர்களை உளநெருக்கீட்டிற்கும், கேலிக்கும் உள்ளாக்குகின்றன.
இவ்வாறான நிலையில்,நீண்டவரிசையில் காத்திருப்போர் எரிபொருள் கிடைக்காமல் அன்றாட செயல்பாடுகளை செய்வதறியாது திகைக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆசிரியர்களின் நிலை திண்டாட்டம் மாணவர்களின் நிலையோ கொண்டாட்டம் என்ற நிலையை உருவாகி பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைந்து காணப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது கூலி வேலை செய்து அன்றாடம் எரிபொருளை நிரப்புவர்களின் நிலையும் திண்டாட்டமாகவுள்ள அதேவேளை பணம் வைத்திருப்பவர்கள் எரிபொருளை பதுக்குகின்றனர்.
பின்னர் கறுப்பு சந்தையில் விற்பனைக்கு விடுகின்றனர். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பிரதேச செயலகங்களுக்கு ஊடக அரச அதிபர் அனைவரும் எரிபொருளை பெறும் வகையில் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அரச அதிபரின் சுற்றறிக்கைக்கு காத்திருக்கின்றன. விரைந்து நடவடிக்கை எடுத்தால் நடுத்தர வர்க்கத்தினரும் பொருளாதாரத்தில் அடிமட்ட மக்களும் பாதுகாக்கப்படுவர் எனத்தெரிவித்தார்.
















