-செ.ரவிசாந்-
தமிழ்த் தேசத்தின் இருப்பு என்பது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தான் தங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழர் தேசமாகக் குரல் கொடுத்து சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுவதன் மூலம்தான் எதிர்காலத்தில் சிங்கள – பௌத்த பேரினவாதம் தமிழர்களின் மண்ணில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையோ, பௌத்த மயமாக்கலையோ செய்ய முடியாது என்ற நிலைமைக்கு அவர்களைத் தள்ள முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனியார் காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானம் அகற்றப்பட்டுக் காணிகள் அனைத்தும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பது காணி உரிமையாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மாதாந்தம் பௌர்ணமி தினத்திலும் அதற்கு முன்னைய நாளிலும்; தொடர் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. போராட்டம் ஆரம்பமாகி இரண்டரை வருடங்களைக் கடந்திருக்கிறது. அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 14 மாதங்களாகி விட்டபோதிலும் இன்றுவரை தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
தமிழ் மக்களுக்கு ஒரு பரிசுத்தமான வாழ்வை ஏற்படுத்தப் போகின்றோம் என்று சொன்ன அநுரகுமார திஸாநாயக்க இன்றுவரை தையிட்டியில் போராடி வரும் தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க முன்வரவில்லை. அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்து 14 மாதங்கள் கடந்துள்ள நிலையில் சட்டத்தின் ஆட்சி என்பது தமிழர்களுக்குக் கிடையவே கிடையாது என்பது தான் தற்போதைய நடைமுறை யதார்த்தமான உண்மை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















