-பா.பிரதீபன்-
வாகனம் ஓடுவதற்கு ஆசைப்பட்டதால் தான் தாங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்தோம், அதனால் வாகனத்தை பொலிஸார் வழிமறித்தபோது நிறுத்த முடியவில்லை. எம்மை பின்தொடர்ந்து வந்த பொலிஸார் ஒரே ஒரு துப்பாக்கி சூடு மட்டுமே நடத்தினார்கள். உடனேயே மருமகன் சரிந்து விழுந்தார்.
மேற்கண்டவாறு அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் நேற்று பிணையில் விடுதலையான பின்னர் ஊடகங்களுக்கு கூறினர். அதில் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
உமையாள்புரத்தில் உள்ள வயலில் அறுபடை செய்வதற்காக ஆட்களை ஏற்றிவரவே சென்றிருந்தோம். தீவக வீதியில் சிறுவன் வாகனத்தை ஓட்டுவதற்கு ஆசைப்பட்டதால் வாகனத்தை கொடுத்தோம். அதனால் பொலிஸார் வழிமறித்தபோது நிறுத்த முடியவில்லை. பின்னர் மண்டைதீவில் பொலிஸார் உசாரடைவதை அறிந்து வாகனத்தை திருப்பிய வேளை எம்மை பின்தொடர்ந்து வந்திருந்த பொலிஸார் ஒரே ஒரு துப்பாக்கி சூடு நடத்தினர். அதையடுத்து மருமகன் வாகனத்தை நிறுதிவிட்டு சரிந்து விழுந்தார். பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எங்களை கைது செய்து கொண்டு சென்றார்கள். வாகனத்தின் பின்புறம் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் எமக்கு தெரியாது. வாகனத்தில் இருந்த சாணம், கயிறு, வாள் தொடர்பாக எதுவும் எமக்கு தெரியாது என்றனர்.


















