-அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உறுதி-
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும் கரிசனைகள் குறித்து ஜனாதிபதியுடன் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திடம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த்துக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை யாழில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து மறுக்கப்பட்டுவருவது குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த பிரதிநிதிகள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகப்பொறிமுறை எனக்கூறி நிறுவப்பட்டிருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்திறனற்ற நிலை மற்றும் அக்கட்டமைப்பின் மீதான தமது அவநம்பிக்கை குறித்தும் விளக்கமளித்தனர்.
இவற்றை செவிமடுத்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் கரிசனைகள் குறித்து தான் ஜனாதிபதியிடம் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வாக்குறுதியளித்தார்.
அத்தோடு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இவ்வாறான கட்டமைப்புக்களுக்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் எத்தகைய கட்டமைப்புக்கள் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் வினவினார். அதற்குப் பதிலளித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தாம் உள்ளகப்பொறிமுறைகள் மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும், அவ்வாறு உள்ளகப்பொறிமுறைகள் நிறுவப்படும் பட்சத்தில், அவற்றின் சகல உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் அபிப்பிராயங்களைக் கருத்திற்கொண்டே நியமிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


















