-க.கனகராசா, பா.பிரதீபன், சி.ஜெகதீஸ்வரன்-
வடமராட்சி – கரணவாய் பகுதியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இரண்டு சந்தேக நபர்களை அம்பாறையில் வைத்து காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
20 வயதுடைய முஸ்லிம் இளைஞரும், 24 வயதுடைய தமிழ் இளைஞருமே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்தவர்கள் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் கொலைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியதுடன், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அவர்களின் உடமையில் இருந்து ஹேரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ் இளைஞர்கள் என்றும், அதில் ஒருவர் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி – கரவெட்டி, கரணவாய் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் நடு வீதியில் வைத்து 29 வயதான இராஜகுலேந்திரன் பிருந்தன் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணை மேற்கொண்டார். இதற்கு மேலதிகமாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில், காங்கேசன்துறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வந்தது.
இந்நிலையில் கொலையினை செய்துவிட்டு அம்பாறை, அக்கரைப்பற்று பகுதியில் வைத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரான்ஸில் வசிக்கும் தமது சகோதரருக்காக கொலை செய்ததாகவும், பிரான்ஸில் வசிக்கும் சகோதரருக்கும் பிரிந்தனுக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்டது. பிரிந்தன் பிரான்ஸிற்கு வந்தால் தான் உயிருடன் இருக்க முடியாது எனவும், இதனால் ஏற்கனவே சில குழுக்களுக்கு பிரிந்தனை கொலை செய்வதற்கு பணம் வழங்கிய போதிலும், பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றியதாகவும், இதனால் சகோதரனுக்காக தாமே கொலை செய்து அவரின் தொலைபேசியையும் எடுத்துச் சென்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைதான சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நெல்லியடிப் பொலிஸார் அவர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரினர். இதற்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் இந்துஜா சிவலிங்கம் சந்தேக நபர்களை ஏழு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.

















