காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தருதல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், காணாமல் போனவர்கள் வெறும் புள்ளிவிபரங்களோ அல்லது எண்ணிக்கைகளோ அல்ல என்றும், அவர்களது குடும்பங்கள் நீண்டகாலமாக மனவேதனையுடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 452 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளதுடன், பதிவு செய்யப்படாத பல சம்பவங்களும் இருக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, உண்மையை கண்டறிதல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
ஆகவே, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உண்மையை கண்டறிதல், நீதி நிலைநாட்டல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன் போது குறிப்பிட்டார்.
















