-கஜிந்தன்-
வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும்.
கார்த்திகையில் மரங்களை நடுகை செய்தல் தேசத்தைக் குளிரச் செய்யும் சூழலியற் செயல் மாத்திரமல்ல் அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச் செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூமி விரைந்து சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிவேகத்துடன் நீண்ட நேரம் நின்று தாக்கும் சூறாவளிகள், காலம் தப்பிக் கொட்டித் தீர்க்கும் அடைமழை, காடுகளில் தீ மூட்டும் கடும் வறட்சி, உயர்ந்து செல்லும் கடல் மட்டம், உயிரினங்களின் பேரழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப் பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மற்றவர்களைக் கூட்டாக நினைவிற் கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது ஆதி வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்து, அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர்.
கார்த்திகைமாத மரநடுகை என்பது தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும். எனவே தமிழ் மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன் கூடிய ஒரு தமிழ்த் தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















