-க.சபேஷன்-
யாழ்.தீவகத்திலிருந்து கால்நடைகள் இறைச்சிக்காக களவாடப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி வேலணையில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் நேற்று காலை 10 மணியளவில் மேற்படி போராட்டம் வங்களவடியில் நடைபெற்றது.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேலணை பிரதேச செயலகம்வரை பேரணியாக நகர்ந்து சென்று பிரதேச செயலர் தனபாலசிங்கம் அகிலனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தீவகத்தில் இறைச்சிக்காக கால்நடைகளை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
வேலணை பிரதேசத்தில் 420க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பண்ணையாளர் இருக்கின்றனர். இவர்கள் சுமார் 3000 வரையிலா பல்லின கறவை மாடுகளை வளர்ப்பதுடன், அவற்றின் ஊடாக பால் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர். நாளாந்தம் 2000 லீற்றர் பால் விற்பனை செய்யப்படுகின்றது. 4000 வரையான ஆடுகளும் வளர்க்கப்படுகின்றது.
இந்நிலையில், தீவகத்தில் இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சுமார் 30 ஆயிரத்திற்கும் மேலான மாடுகள் இறைச்சிக்காக திருடிச் செல்லப்பட்டுள்ளன.
இலங்கையில் 1959 ஆண்டின் 29 ஆம் இலக்கத்தில் கால்படைகளை பாதுகாக்க மிகப்பெரும் சட்டம் இருக்கின்றது. அது முழுமைதாக நடைமுறையாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
அந்தவகையில் கால்நடை திருட்டுக் கும்பலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் சட்டம் ஒழுங்கு தரப்பினருக்கு எமது ஒத்துழைப்பு இருக்கும் என்றும் தெரிவித்தனர்.


















