-நுணாவில் எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவிப்பு-
-த.சுபேசன்-
மீனவர்கள் மற்றும் விவசாயிகள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வருகைதரும் பட்சத்தில் அவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கான எரிபொருட்கள் கொள்கலன்களில் வழங்கப்படும் என நுணாவில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் கலாநிதி வைத்திலிங்கம் சிவராசா தெரியப்படுத்தியுள்ளார்.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வருகின்ற பதற்ற நிலைமையால் இங்குள்ள மக்கள் எரிபொருள் கொள்வனவில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் விவசாயம்,கடற்தொழில் போன்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் அதேநேரம் ஜெனரேட்டர் போன்ற இயந்திரங்களை பயன்படுத்துபவர்களும் கொள்கலன்களில் எரிபொருட்களை பெற தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
எனவே அவர்களுடைய தொழில் நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு நுணாவிலில் அமைந்துள்ள எமது ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக அவர்களுடைய தொழில் நடவடிக்கைக்கு தேவையான எரிபொருட்களை கொள்கலனில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எனவே உரிய தொழில்களில் ஈடுபடுபவர்கள் கிராம அலுவலருடைய உறுதிப்படுத்தல் கடிதத்தோடு எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும். தென்மராட்சி பிரதேச விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள் மாத்திரமின்றி ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் உரிய ஆதாரத்தோடு எரிபொருள் கொள்வனவில் ஈடுபடலாம் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


















